என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழந்தை கடத்தல் கும்பல்"
ஐதராபாத்:
ஐதராபாத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் முகமது அஸம். 32 வயதாகும் இவர் ஐதராபாத் கச்சி பாவ்லியில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகன் இருக்கிறான். ஐதராபாத் எர்ரகுந்தா என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரது நண்பர்கள் கத்தார் நாட்டைச் சேர்ந்த முகமது சலாம் மற்றும் நூர்முகமது, சல்மான் ஆகியோர் ஐதராபாத் வந்தனர்.
இவர்கள் 3 பேருடன் முகமது அஸம் கர்நாடக மாநிலம் பிதர்நகரில் நடைபெறும் நண்பரின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டு இருந்தார்.
வழியில் கமால்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு பள்ளி அருகே சாப்பிடுவதற்காக காரை நிறுத்தினார்.
அப்போது கத்தார் நண்பரான சலாம் தான் கத்தார் நாட்டில் இருந்து கொண்டு வந்திருந்த சாக்லேட்டுகளை எடுத்து பள்ளி குழந்தைகளுக்கு கொடுத்தார். குழந்தைகளிடம் அவர்கள் அன்பாக பேசிக் கொண்டு இருந்தனர்.
இதைப்பார்த்த கிராம மக்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. கிராம மக்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகப்பட்டு விசாரித்தனர். அவர்கள் சொன்னதை நம்பாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பயந்து போன முகமது அஸம் மற்றும் நண்பர்கள் காரில் அங்கிருந்து தப்பினர்.
இதனால் கிராம மக்களின் சந்தேகம் வலுத்தது. கார் சென்ற வழியில் உள்ள பக்கத்து கிராமத்துக்கு அவர்கள் போன் செய்து குழந்தை கடத்தல் கும்பல் காரில் வருகிறது மடக்குங்கள் என்று தெரிவித்தனர்.
உடனே பக்கத்து கிராம மக்கள் உஷார் ஆகி கார் வந்ததும் மடக்கி அதில் இருந்தவர்களை என்னவென்று கூட விசாரிக்காமல் சரமாரியாக தாக்கினார்கள். இதில் முகமது அஸம் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். மற்ற 3 பேரும் காயத்துடன் அவர்களிடம் இருந்து தப்பி காரில் சென்றுவிட்டனர். இதனால் 3 பேரும் உயிர் தப்பினார்கள்.
நடந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர். இந்த சம்பவம் கர்நாடகத்திலும் ஐதராபாத்திலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியான முகமது ஆஸம் குடும்பத்தினர் மிகுந்த துயரம் அடைந்துள்ளனர். அப்பாவியை கொன்று விட்டார்கள். அவரை தாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எங்களுக்கு நீதி வேண்டும் என்று கதறினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக பிதர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். ஆனால் கிராம மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
அசாம் மாநிலம் கர்பி அங்லாங் பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கர்பி அங்லாங் பகுதியில் உள்ள பஞ்சரி காசரி கிராமம் வழியாக ஒரு கார் சென்றுள்ளது. டோக்மோகா நோக்கி சென்ற அந்த காரை பொதுமக்கள் சிலர் வழிமறித்து விசாரித்துள்ளனர். அப்போது காருக்குள் இருந்த நபர்களின் நீண்ட தலைமுடி மற்றும் அவர்களின் தோற்றத்தைப் பார்த்து குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க அரசு தவறிவிட்டதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். #AssamChildKidnappers
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரி பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
வடமாநிலத்தில் இருந்து, குழந்தை கடத்தல் கும்பல் தமிழகத்திற்குள் புகுந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதையடுத்து, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பகல் மற்றும் இரவு நேரங்களில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள், தமிழில் பேச தெரியாததால், பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ஒன்னல்வாடியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நினைத்து, அந்த பகுதி மக்கள் சரமாரி தாக்கினர். இதில் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி சரிந்த அந்த நபரை அங்கிருந்த சிலர் ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபர், சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் விரைந்து சென்று விசாரித்தார்.
இதில், நேற்று மாலை ஒன்னல்வாடி பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த அந்த நபர், குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், வாலிபர்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர். ஆனால், அந்த நபருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று எந்த மொழியும் தெரியாததால், தன்னிடம் கேட்ட எந்த கேள்விக்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. இதனால், அவர் குழந்தைகளை கடத்த வந்தவர் என்று தாங்களாகவே முடிவு செய்து கொண்ட மக்கள், அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த அவர், தீவிர சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை வரை அவரை போலீசாரால் அடையாளம் காணமுடியவில்லை. இதனால் போலீசார் அவரது பிணத்தை புகைப்படமாக எடுத்து ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலை காவலாளிகளிடம் காட்டி அவர் யார் என்று விசாரித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட வாலிபருடன் மேலும் 2 வடமாநில வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களையும் பொதுமக்கள் தாக்க ஆரம்பித்த உடன் அவர்கள் 2 பேரும் தப்பியோடி விட்டனர். அவர்கள் பிடிபட்டால் தான் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று தெரியவரும்.
இந்த நிலையில் வட மாநில வாலிபரை அடித்து கொலை செய்தது யார் என்பது குறித்து ஒன்னல்வாடியில் இன்று போலீசார் விசாரணை நடத்தி 5 பேரை பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.
இந்த கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த அதே கிராமத்தை சேர்ந்த ராஜப்பா மகன் மூர்த்தி (25) என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரது செல்போன் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து, வடமாநில மாநிலத்தவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வட மாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னையிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கோவிலுக்கு வழிபாடு நடத்துவதற்காகச் சென்ற மூதாட்டியை, அவர் குழந்தைகளை கடத்த வந்திருக்கலாம் என்ற அச்சத்தில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை குழந்தையைக் கடத்த வந்தவராகக் கருதி அப்பகுதி மக்கள் உருட்டுக்கட்டைகளால் அடித்து கொலை செய்துள்ளனர். அவரது உடலை அங்குள்ள பாலத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தின் பல இடங்களிலும் அப்பாவிகள் பலர் குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என்ற ஐயத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைகளையும், உயிர்களையும் மதிக்காத இத்தகைய செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இவை உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.
தமிழக அரசும், காவல்துறையும் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால் இத்தகைய நிகழ்வுகளை தடுத்திருக்க முடியும். வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், வட மாவட்டங்களில் குழந்தைகள் கடத்தல் கும்பல் ஊடுருவியிருப்பதாக வதந்திகள் பரவிய போதே, அதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று யூகித்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்திருக்க வேண்டும்.
தொடக்கத்தில் அப்பாவி மக்கள் சிலர் தாக்கப்பட்ட போதே, காவல்துறையினர் விழித்துக்கொண்டு, உள்ளூர் காவல்நிலையங்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால் மக்கள் மத்தியில் நிலவிய அச்சமும், பதற்றமும் விலகியிருக்கும். இத்தகைய கொடூரத் தாக்குதல்களும், உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் வட மாவட்டங்களில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும்.
இனியாவது தமிழக அரசும், காவல்துறையும் விழித்துக் கொண்டு வதந்திகள் குறித்த மக்களின் அச்சத்தைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்து வோரும் தங்களின் சமூகக் கடமைகளை உணர்ந்து பொது அமைதியை குலைக்கும் எந்த செய்தியையும் பகிரக்கூடாது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு உலகத்தர சிகிச்சையையும் அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.#tamilnews
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வடமாநில நபர்கள் புகுந்து குழந்தைகளை கடத்திச் செல்வதாக வலை தளங்களில் வதந்தி பரவி வருகிறது.
இதனால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வரும் அடையாளம் தெரியாதவர்களையும் சரமாரியாக தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடியாத்தம் பகுதியில் ‘திருடன்’ என வடமாநில வாலிபர் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கிராம மக்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறிலும் திருமண விசேஷத்திற்கு சமையல் வேலைக்கு சென்ற கல்லூரி மாணவன் சதாசிவம். திருடன் என நினைத்து கல்வீசி கொல்லப்பட்டார். இந்த நிலையில் போளூரில் கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து கிராம மக்கள் தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் ருக்மணி (வயது 65). இவரது அக்காள் மகன் மோகன்குமார் (34). மற்றும் உறவினர் சந்திரசேகரன் இருவரும் மலேசியாவில் வேலை செய்து வருகின்றனர்.
தற்போது சென்னை வந்துள்ள அவர்கள் இருவரும் நண்பர்கள் வெங்கடேசன் (51), கஜேந்திரன் ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தண்ணீர் குளம் என்ற இடத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்ல நேற்று காலை காரில் புறப்பட்டனர்.
ருக்மணிக்கு குலதெய்வ கோவில் தெரியும் என்பதால் அவரும் அவர்களுடன் சென்றார்.
போளூர் அடுத்த ஜம்னாமரத்தூர் அருகே உள்ள தம்புகொட்டான் பாறை கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வழி தெரியாததால் அங்கு காரை நிறுத்தி அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சிவா மகள்கள் ஜனசுருதி (4), ருத்ராஸ்ரீ(3) மற்றும் சில குழந்தைகள் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
குழந்தைகளை பார்த்ததும் காரிலிருந்து இறங்கிய ருக்மணி அவர்களுக்கு வெளிநாட்டு சாக்லெட்டை எடுத்துக் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த அங்கிருந்த பெண்கள் குழந்தை கடத்தல்காரர்கள் என கூச்சல் போட்டதோடு மூதாட்டி ருக்மணியை தாக்கினர். அங்கிருந்த பெண் ஒருவரும் தாக்கினர். அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது.
இதை சற்றும் எதிர்பாராத மூதாட்டி மற்றும் காரில் வந்தவர்கள் நிலைமை விபரீதமாவதை உணர்ந்து காரில் ஏறி தப்பி சென்றனர்.
உடனே பக்கத்தில் உள்ள களியம் கிராமத்திற்கு கார் எண்ணை கூறி குழந்தை கடத்தல் கும்பல் வருகிறார்கள் என்று தம்புகொட்டான்பாறை கிராமத்தினர் செல்போனில் தகவல் அளித்தனர்.
இந்த தகவல் ஜமுனாமரத்தூர் மலை கிராமங்களில் வேகமாக பரவியது. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் களியம் பஸ் நிலையம் அருகே திரண்டனர்.
சிறிது நேரத்தில் களியம் பஸ் நிலையம் அருகே அந்த கார் வந்தது. காரை கிராம மக்கள் வழிமறித்தனர்.
பின்னர் காரில் இருந்த 5 பேரையும் கீழே இழுத்து போட்டு உருட்டு கட்டைகளால் கண்மூடித்தனமாக தாக்கினர்.
அடி உதை தாங்காமல் அலறிய அவர்கள் நாங்கள் சென்னையில் இருந்து குலதெய்வ கோவிலுக்கு வந்தோம். வழிபாடுக்கு கோவிலுக்கு வந்தோம். நாங்க... குழந்தையை கடத்த வரவில்லை. என்று கதறினர்.
ஆனாலும் அவர்கள் சொல்வதை கேட்காமல் கிராம மக்கள் கொடூரமாக தாக்கியதில் 5 பேருக்கும் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உயிருக்கு போராடிய நிலையில் எங்களை விட்டு விடுங்கள் என்று அவர்கள் மன்றாடியபோதும் கோர தாக்குதலை கிராம மக்கள் நிறுத்தவில்லை.
ஒரு கட்டத்தில் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் 5 பேரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் மயங்கி விழுந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 5 பேரையும் மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார்.
ருக்மணியின் கணவர் ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். காயமடைந்த சென்னை பழைய பல்லாவரம் வெங்கடேசன். மலேசியாவை சேர்ந்த மோகன்குமார், சந்திரசேகர் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கஜேந்திரன் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தையடுத்து போளூர் டி.எஸ்.பி. சின்ராக் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை கிராமத்திற்கு சென்று விரட்டி விரட்டி பிடித்து கைது செய்தனர்.
தம்புகொட்டான்பாறை கலியம், திண்டிவனம், இந்திரா நகர் கணேசபுரம், அத்திமூர் ஆகிய மலை கிராமங்களை சேர்ந்த 62 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
இதில் சிவா, முருகன், ரஞ்சித், அத்திமூர் ஷேக், அசோக், பாலா, சந்திரசேகர் பிரசாந், ஏழுமலை, பிரபு, சிவக்குமார், ஜம்பிங்புரம் சிவக்குமார், பழனி, ராஜாபாபு, பிரபாகரன், மணிகண்டன், ராஜமூர்த்தி, மாயகண்ணன், முருகன், சக்திவேல், ராமச்சந்திரன், கோவிந்தராஜ், ஜெயபிரகாஷ், மேலும் 2 பேர் உள்பட 25 பேரை கைது செய்தனர்.
மேலும் 37 பேரை தேடி வருகின்றனர். கைதானவர்களை போளூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
இதேபோல் ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று வட மாநில வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டார். அங்கிருந்தவர்கள், அவர் குழந்தைகளை கடத்த வந்திருப்பவர் என கருதி அவரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ராணிப்பேட்டை போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சஞ்சய் (28) என்றும், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சோளிங்கரிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரிடம் அங்கு வந்தவர்கள் எதற்காக இங்கு வந்துள்ளாய், உனக்கு எந்த ஊர் என கேட்டுள்ளனர். ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த பெண்ணால் பதில் கூற முடியவில்லை.
இதனால் அந்த பெண், குழந்தையை கடத்த வந்திருக்கலாம் என கூறி அடித்து உதைத்தனர். அடி தாங்க முடியாமல் அந்த பெண் அலறினார்.
இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ், சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சோளிங்கரை சேர்ந்த விஜய் (வயது 25), முத்து (23), பாபு (26), கணேஷ் (27) ஆகியோரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்